குளித்தலை அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
குளித்தலை அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
குளித்தலை,
விவசாயி மீது தாக்குதல்
குளித்தலை அருகே உள்ள தெற்குமைலாடி கல்லுமடை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 54), விவசாயி. இவர் நேற்று முன்தினம் கருங்கலாபள்ளியில் உள்ள தனது வயலுக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் சிலர் சாலையை மறித்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர். அவர்களை சாலையோரமாக அமரும்படி பாலசுப்பிரமணியன் கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் பாலசுப்பிரமணியன் தெற்கு மயிலாடி பகுதியில் இருந்தபோது அங்கு வந்த கருங்கலாப்பள்ளி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (19), திருப்பதி (22), கர்ணன் (23), சந்தனபாண்டியன், சுரேந்தர், அகிலன் ஆகிய 6 பேரும் பாலசுப்பிரமணியனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
3 பேர் கைது
இதைத்தடுக்க வந்த அவரது மகன் சேகரை அரிவாளின் பின் பகுதியால் தலையில் அடித்து காயப்படுத்தினர். மேலும் பாலசுப்பிரமணியனின் தம்பி தங்கராசுவையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். இதனால் பீதியடைந்த அவர்கள் 6 பேரும் பாலசுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீதகிருஷ்ணன், திருப்பதி, கர்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்தனபாண்டியன், சுரேந்தர், அகிலன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story