பணிக்கம்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
மழைநீர் வடிகாலை சரிசெய்ய வலியுறுத்தி பணிக்கம்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
சாலை மறியல்
குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீர் வடிகாலை சரிசெய்ய வலியுறுத்தி பணிக்கம்பட்டி சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பணிக்கம்பட்டி-நடுப்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் வடிகால் ஒன்று செல்கிறது. இந்த வடிகாலை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தை
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் அப்பகுதியில் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் சேறும், சகதியுமாக இருப்பதால் இப்பாதை வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறோம். எனவே இப்பகுதியிலுள்ள வடிகாலை சரிசெய்து மழைநீர் வடிகால் வழியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் மருதூர் பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் தேங்கிய மழை நீரை மின் மோட்டார் வைத்து உடனடியாக வெளியேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் தங்களுக்கு நிரந்தர தீர்வுகான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story