தீபத்திருவிழாவின் போது கிரிவலம் செல்ல, அன்னதானம் வழங்க தடை


தீபத்திருவிழாவின் போது கிரிவலம் செல்ல, அன்னதானம் வழங்க தடை
x
தினத்தந்தி 6 Nov 2021 11:24 PM IST (Updated: 6 Nov 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

தீபத்திருவிழாவின் போது கிரிவலம் செல்ல மற்றும் அன்னதானம் வழங்க தடைவிதிக்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

தீபத்திருவிழாவின் போது கிரிவலம் செல்ல மற்றும் அன்னதானம் வழங்க தடைவிதிக்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

 கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கெள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கோவிலில் விழா நாட்களில் சாமி உலா நடைபெறும் பகுதி, பக்தர்கள் சாமி தரிசனம் செல்ல ஏற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது. 

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே இணையவழி மூலம் டிக்கெட் பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்திட கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண்ணை, வாகன ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதி சீட்டு எடுத்து வர வேண்டும்.

 உள்ளூர் பக்தர்கள்

உள்ளூர் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 3 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.

இந்த அனுமதி சீட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம், இணை ஆணையர் இந்து அறநிலையத்துறை அலுவலகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை வழங்கப்படும். 

கட்டுப்பாடுகள் விதித்த நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த அனுமதி சீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.  10-ந்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கொடியேற்றம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அப்போது அனுமதி கிடையாது.

பின்னர் காலை 9 முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவார்கள்.  மேலும் 16-ந்தேதி பஞ்சமூர்த்திகள் உற்சவம், தேரோட்டம் கோவில் பிரகாரத்தில் உள்ளே நடைபெற உள்ளது. 

தீபத் திருவிழாவின் போது மலை மேல் ஏறுவதற்கு பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. 

 4 நாட்கள் கிரிவலம் செல்ல தடை

வழக்கமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தன்று தரிசனம் செய்ய வருவார்கள்.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பக்தர்களின் நன்மைக்காக 17-ந்தேதி மதியம் 1 மணி முதல் 20-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லவும் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யவும் அனுமதியில்லை.

மற்ற நாட்களில் கிரிவலம் செல்லலாம். கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்ய அனுமதி கிடையாது.

உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யுமாறும், திருவண்ணாமலையில் சுற்றியுள்ள விடுதிகள், ஓட்டல்கள், ஆசிரமங்கள், மண்டபங்களில் 3 முதல் 5 நாட்கள் மொத்தமாக முன் பதிவு செய்வதற்கு அனுமதி கிடையாது.

 கொரோனா பரிசோதனை

தற்காலிக பஸ் நிலையம் 10-ந்தேதி முதல் 23-ந்தேதி தீபம் முடியும் வரை அமைக்கப்பட உள்ளது. ஈசான்யம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருகோவிலூர் ரோடு ஆகிய 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு இருக்க வேண்டும். அல்லது 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து பரிசோதனை சீட்டு கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டுமே தீபத்திருவிழாவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

கொரோனா தொற்று நெறிமுறைகளை கடைப்பிடித்து அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தீபத்திருவிழாவை கொண்டாட வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story