காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2021 12:03 AM IST (Updated: 7 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம்:
தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. 
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
ஆர்ப்பரித்து கொட்டியது
மேலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story