மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
கீரிப்பாறையில் ஒரு மாதத்தில் 4-வது முறையாக மழை வெள்ளத்தில் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அரசு ரப்பர் கழக தொழிற்சாலை 2 நாட்கள் மூடப்பட்டது.
நாகர்கோவில்,
கீரிப்பாறையில் ஒரு மாதத்தில் 4-வது முறையாக மழை வெள்ளத்தில் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அரசு ரப்பர் கழக தொழிற்சாலை 2 நாட்கள் மூடப்பட்டது.
காட்டாற்று வெள்ளம்
குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகில் உள்ள கீரிப்பாறையில் தமிழக அரசின் ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலை அமைந்துள்ளது. கீரிப்பாறை பஸ் நிறுத்தத்துக்கும், அரசு ரப்பர் கழக தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருப்புக்கும் இடையே காட்டாறு ஒன்று ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குடியிருப்புக்கும், அங்கிருந்து பஸ் நிறுத்தம் அமைந்துள்ள பகுதிக்கும் சென்று வர வசதியாக மண்ணால் ஆன தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்யும் போதெல்லாம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் தற்காலிக பாலம் அடிக்கடி சேதமடைந்து வந்தது.
4 முறை அடித்துச் செல்லப்பட்டது
கடந்த மாதத்தில் இருந்து குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து இம்மாதம் வரை 4 முறை காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கடைசியாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் பெய்த மழையில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் அரசு ரப்பர் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுத்துச் செல்லக்கூடிய குழாயிலும் மீன்முட்டி என்ற பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைக்கு தண்ணீர் வரத்தும் தடைபட்டுள்ளது.
ஏற்கனவே தற்காலிக பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ரப்பர் தொழிற்சாலைக்கு ரப்பர் கொண்டுவரக்கூடிய வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது. ரப்பர் பால் மற்றும் ரப்பர் ஷீட் தயாரிப்பதற்கு அடிப்படை தேவையாக இருக்கக்கூடிய தண்ணீ்ர் வரத்தும் தடை பட்டுள்ளதால் நேற்று முன்தினமும், நேற்றும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் கீரிப்பாறை பஸ் நிறுத்தத்துக்கும், தொழிற்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலத்தை சீரமைக்கும் பணியில் அரசு ரப்பர் கழக ஊழியர்களும், தொழிற்சாலை ஊழியர்களும் ஈடுபட்டனர். இந்த பணி நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு வரக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணியையும் மேற்கொள்ள உள்ளனர். அந்த பணி நிறைவடைந்த பிறகு மீண்டும் தொழிற்சாலை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.3.50 கோடி ஒதுக்கீடு
ஏற்கனவே 3 முறை தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டபோது 2 முறை அரசு ரப்பர் தொழிற்சாலை சார்பிலும், ஒரு முறை தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து சார்பிலும் சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தை நிரந்தர பாலமாக அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு ரப்பர் தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். நிரந்தர பாலம் அமைந்தால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story