மேலகூத்தங்குடி பகுதி துண்டிக்கப்படும் அபாயம்


மேலகூத்தங்குடி பகுதி துண்டிக்கப்படும் அபாயம்
x
தினத்தந்தி 7 Nov 2021 1:43 AM IST (Updated: 7 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருேக வாய்க்கால் மரப்பாலம் சேதமடைந்து வருவதால் மேலகூத்தங்குடி பகுதி துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது

திருவாரூர்;
திருவாரூர் அருேக  வாய்க்கால் மரப்பாலம் சேதமடைந்து வருவதால் மேலகூத்தங்குடி பகுதி துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இதை கவனித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலகூத்தங்குடி கிராமம்
திருவாரூர் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் மேலகூத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமம் பெருங்குடி ஊராட்சி அருகில் காட்டாற்றின் கரை எதிர் திசையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் காட்டாற்றில் தற்காலிகமாக மூங்கில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை  கடந்து வயல்கரை சாலையை பயன்படுத்தி தான் பெருங்குடி ஊராட்சிக்கு செல்ல வேண்டும். தற்போது இந்த மரப்பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. 
மேலகூத்தங்குடி கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க இந்த வழிப்பாதையை பயன்படுத்தி தான் கீழப்படுகை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். 
 வாய்க்கால் பாலம்
மேலகூத்தங்குடி மக்கள் சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால்  மேல கூத்தங்குடியில் இருந்து கீழகூத்தங்குடி, புலிவலம் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி பெருங்குடிக்கு செல்ல வேண்டும். எனவே காட்டாற்றில் நிரந்த பாலம் கட்டி வயல்வழி சாலையை விரிவுபடுத்தி கப்பி சாலையாக அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
மேலும் மேல கூத்தங்குடி- கீழகூத்தங்குடி பகுதியை இணைக்கும் இடத்தில் வாய்க்கால் பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. தற்போது காட்டாற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால் இந்த பள்ளம் தொடர்ந்து இடிந்து வருகிறது.
இதனால் இந்த பாலத்தை வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 ஆம்புலன்ஸ் 
 அவசர ஆபத்து காலத்தில் ஆம்புலன்ஸ் கூட மேல கூத்தங்குடி கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலகூத்தங்குடி பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது. 
இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
எனவே மேலகூத்தங்குடி பகுதி ஒரு வழிப்பாதையில் பாலம் பழுதடைந்துள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும். காட்டாற்றின் நிரந்த பாலம் அமைத்து வாகனங்கள் செல்லும் வகையில் வயல்வழி சாலையை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story