தஞ்சை பெரியகோவிலில் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேற்று தஞ்சை பெரியகோவிலில் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேற்று தஞ்சை பெரியகோவிலில் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா தொற்று காலம் என்பதால் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. வெளியூர் பக்தர்களின் வரத்தும் குறைவாகவே இருந்தது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தஞ்சை பெரியகோவிலுக்கு காலை முதல் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராஹி அம்மன், கருவூர் சித்தரை வழிபட்டும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்களையும் கண்டுகளித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. அங்கே வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நீதிமன்ற சாலை, திலகர் திடல் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
வெளியூர்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவினை அருகில் உள்ள சோழன்சிலை பூங்கா மற்றும் திலகர் திடல் ஆகிய பகுதிகளில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர்.
முக கவசத்தை மறந்த பக்தர்கள்
மேலும் பெரியகோவில் வளாகத்தில் உள்ள புல்தரையில் குழந்தைகள் விளையாடுவதை பார்த்து கொண்டே பெரியவர்கள் அமர்ந்து இருந்தனர். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு எப்படி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகஅளவில் இருந்ததோ அதைபோன்று பக்தர்கள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் பெரியகோவிலுக்கு வந்த பக்தர்கள் 95 சதவீதம் பேர் முக கவசம் அணியவில்லை.
Related Tags :
Next Story