சென்னைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயம் சேலம் பெண் என்ஜினீயர் கதி என்ன? காதலன் தலைமறைவு?; போலீசார் விசாரணை


சென்னைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயம் சேலம் பெண் என்ஜினீயர் கதி என்ன? காதலன் தலைமறைவு?; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Nov 2021 3:15 AM IST (Updated: 7 Nov 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு செல்வதாக கூறி சென்று மாயமான சேலத்தை சேர்ந்த பெண் என்ஜினீயரின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 
பெண் என்ஜினீயர்
சேலம் டவுன் ஆற்றோரம் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் சுமிதா (வயது 29). பி.டெக். படித்துள்ள இவர், சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவருடைய பெற்றோர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான என்ஜினீயர் சுமிதா பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல்
காணாமல் போன சுமிதா, இதற்கு முன்பு பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த சரண்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களது நட்பு காதலாக மாறியது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் இருவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனிடையே, சரண்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அவருடைய திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததை தெரிந்து கொண்ட சுமிதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் விழுப்புரத்திற்கு சென்று தனது காதலனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சரண்குமாரின் திருமணம் நின்றுபோனது.
கதி என்ன?
இந்தநிலையில் தான் சென்னைக்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக கூறி சென்ற சுமிதாவை தற்போது காணவில்லை. எனவே, சரண்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் விழுப்புரம் சென்றனர். ஆனால் அங்கு சரண்குமார் இல்லை. அவருடைய பெற்றோரிடம் போலீசார் விசாரித்தபோது, வெளியூர் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், போலீஸ் விசாரணைக்கு சேலம் வருமாறு பெற்றோரிடம் போலீசார் கூறியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள சரண்குமாரிடம் விசாரணை நடத்திய பிறகு தான் சுமிதாவின் கதி என்ன? என்ற விவரம் தெரியவரும். அதேநேரத்தில் சுமிதாவின் தோழிகள், நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடைசியாக யார்? யாரிடம்? செல்போனில் பேசினார் என்ற விவரத்தையும், அவரது வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story