புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியம் காட்டவில்லை; டாக்டர் ரமணராவ் விளக்கம்
‘‘எனது மகனாக நினைத்து தான் சிகிச்சை அளித்தேன், புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியம் காட்டவில்லை’’ என்று டாக்டர் ரமணராவ் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு: ‘‘எனது மகனாக நினைத்து தான் சிகிச்சை அளித்தேன், புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியம் காட்டவில்லை’’ என்று டாக்டர் ரமணராவ் விளக்கம் அளித்துள்ளார்.
டாக்டர் மீது புகார்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில், புனித் ராஜ்குமார் மரணத்திற்கு, அவரது குடும்ப டாக்டரான ரமணராவ் காரணம் என்று, அவரது ரசிகர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அத்துடன் புனித் ராஜ்குமார் சாவுக்கு டாக்டர் ரமணராவ் காரணம் என்று கூறி, அவர் மீது பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் 2 புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது புனித் ராஜ்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, அவரை ஆம்புலன்சில் அனுப்பி வைக்கவில்லை, தனது மகன் பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார், புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்காமல் கிளினிக்கில் உட்கார வைத்திருந்தார் என ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று டாக்டர் ரமணராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதயம் அழுத்தம்
புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29-ந் தேதி காலையில் எனது கிளினிக்குக்கு வந்தார். காலை 11.15 முதல் 11.20 மணியளவில் இருக்கும். அப்போது நான் ஒரு நோயாளியை பரிசோதித்து கொண்டு இருந்தேன். அப்படி இருந்தும் ஒரு நிமிடம் மட்டுமே புனித் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். உடனடியாக நான் அவரை அழைத்து விசாரித்து சிகிச்சையை தொடங்கினேன். அப்போது அவர் மிகுந்த படப்படப்புடன் இருந்தார். உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வந்ததால் படப்படப்பாக இருப்பதாக புனித் ராஜ்குமார் தெரிவித்தார்.
முதலில் இதய வலி எதுவும் அவருக்கு இல்லை. உடனடியாக இ.சி.ஜி. எடுத்து பார்த்தேன். அப்போது இதயம் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தேன். அதன்பிறகு, அவரது மனைவி அஸ்வினியிடம் இதயம் அழுத்தத்தில் இருப்பதால் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினேன். அந்தசந்தர்ப்பத்தில் தலை சுற்றுவதாக புனித் ராஜ்குமார் கூறினார். உடனடியாக அவரை காரில் அமர வைத்தோம்.
மகனாக நினைத்து...
ஆம்புலன்ஸ் வருவதற்கு 10 முதல் 15 நிமிடமாவது ஆகும். அதனால் தான் அவரை ஆம்புலன்சில் அனுப்பாமல் காரில் அனுப்பினேன். காரில் இருக்கும் போது புனித் ராஜ்குமாரின் நாடித்துடிப்பு சரியாக இருந்தது. அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். எனது கிளினிக்கில் பெரிய அளவில் சிகிச்சை அளிக்கும் வசதி கிடையாது. முதற்கட்ட சிகிச்சை அளித்தும், சில ஆலோசனைகளை வழங்கியும் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பினேன்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலை எனது மகனுக்கு ஏற்பட்டால், எப்படி சிகிச்சை அளிப்பேனோ, அதுபோன்று தான் புனித் ராஜ்குமாரையும் எனது மகனாக நினைத்து சிகிச்சை அளித்தேன். புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிப்பதில் நான் அலட்சியம் காட்டவில்லை. ஒரு டாக்டராக பொதுமக்களுக்கு எவ்வளவு தகவல் தெரிவிக்க முடியுமோ, அந்த தகவலை புனித் ராஜ்குமார் விஷயத்தில் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story