ஆடு மேய்ப்பதில் தகராறு: இருதரப்பினர் மோதலில் 2 பேர் படுகொலை போலீசார் குவிப்பு
கொளத்தூர் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
கொளத்தூர்
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆடு மேய்ப்பதில் தகராறு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை அடுத்த குறும்பனூரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 46). விவசாயி. நேற்று மாலை ஆறுமுகம் அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் வீரப்பனின் விவசாய நிலத்துக்கு பக்கமாக ஆடு மேய்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரப்பன், ஆறுமுகத்திடம் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் நண்பரான சேது என்கிற தனசேகரன் (26) அங்கு வந்தார். அவர் ஆறுமுகத்துக்கு ஆதரவாக பேசினார்.
2 பேர் கொலை
இதனால் ஆத்திரமடைந்த வீரப்பனின் மகன்களான கார்த்தி, ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆறுமுகம், சேதுவை தாக்கினர். இதனை பார்த்து அங்கு வந்த ஆறுமுகத்தின் தரப்பினரும் அவர்களை தாக்கினர். இருதரப்பினரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்டதால், அந்த இடமே போர்க்களமாக காட்சி அளித்தது.
இந்தநிலையில் கார்த்தி, ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சேதுவை பட்டா கத்தியால் வெட்டினர். அப்போது கீழே விழுந்த அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்தனர். இதேபோல் ஆறுமுகத்தின் தரப்பினர் வீரப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மேலும் இதனை தடுக்க வந்த வீரப்பனின் அண்ணனான மாதப்பன் என்பவருக்கும் (50) அரிவாள் வெட்டு விழுந்தது.
டி.ஐ.ஜி. விசாரணை
சேதுவும், வீரப்பனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த பயங்கர கொலைகள் குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோரும் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
பெரும் பரபரப்பு
இதையடுத்து கொலை செய்யப்பட்ட சேது, வீரப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாதப்பன் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த இரட்டை கொலை குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரையும் தேடி வருகின்றனர். இதனிடையே கொலை நடந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கொளத்தூர் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story