வடகிழக்கு பருவமழையையொட்டி தேனி தீயணைப்பு நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்


வடகிழக்கு பருவமழையையொட்டி தேனி தீயணைப்பு நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2021 7:53 PM IST (Updated: 7 Nov 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையையொட்டி தேனி தீயணைப்பு நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

தேனி:
தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால் தேனி மாவட்டத்தில் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் மீட்பு பணிக்கான உபகரணங்களுடன் மீட்பு பணி வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள், வெள்ள பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெள்ள காலங்களில் பிற அரசு துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தகவல் பெற்று அன்றாட வானிலை நிலவரத்துக்கு ஏற்ப மீட்பு பணிகளுக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் தீயணைப்பு படையினருக்கு தன்னார்வலர்களை கொண்ட மீட்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தேனி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் மழையால் பாதிப்பு மற்றும் பேரிடர் ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு 101, 112 மற்றும் தீ செயலியை பயன்படுத்தி தகவல்களை கொடுக்கலாம். தேனி மாவட்ட தீயணைப்பு துறையின் கட்டுப்பாட்டு அறையை 73050 95898 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story