வராகநதி வெள்ளத்தில் சிக்கி பலியான மேலும் ஒரு மாணவர் உடல் மீட்பு
வராகநதி வெள்ளத்தில் சிக்கி பலியான மேலும் ஒரு மாணவர் உடல் மீட்கப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் அக்ரஹாரத்தில் வித்யபாரதி வேத பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். பலத்த மழை காரணமாக இங்குள்ள வராகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த 5-ந்தேதி இங்கு படித்த மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சுந்தர நாராயணன் (வயது 19), சென்னை திருவான்மியூரை சேர்ந்த சுவாமிநாதன் மகன் மணிகண்டன் (21), அஸ்வின் குமார், அய்யப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 5 பேர் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றனர். இதில் ஆற்றில் இறங்கிய சுந்தரநாராயணனும், மணிகண்டனும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து பெரியகுளம் தீயணைப்பு படை வீரர்கள் கடந்த 2 நாட்களாக அவர்களை தேடி வந்தனர். இதில் நேற்று முன்தினம் சுந்தர நாராயணன் உடல் ஆற்றின் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டது. மணிகண்டனை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்தநிலையில் நேற்று மணிகண்டனின் உடல் ஆற்றின் ஓரமாக கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை ஜெயமங்கலம் போலீசார் கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story