அக்னி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கறம்பக்குடி குமரகுளம் வாய்க்கால் உடைப்பு தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் வேதனை
கறம்பக்குடி பகுதி அக்னி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. குமரகுளம் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கறம்பக்குடி:
அக்னி ஆறு
கறம்பக்குடி-திருமணஞ்சேரி விலக்கு சாலை அருகே குமரகுளம் மற்றும் தென்னதிரையர் குளங்கள் உள்ளன. இந்த குளத்தின் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கறம்பக்குடி அக்னி ஆற்றில் தடுப்பணையில் இருந்து வாய்க்கால் மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்த வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் தான் இந்த உடைப்பைபொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்.
வாய்க்காலில் உடைப்பு
இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அக்னி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆற்றின் தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் செல்லும் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. கறம்பக்குடி குமரகுளத்தின் வாய்க்கால்கள் சீரமைக்கபட்டு இருந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பே குளம் நிரம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குமரகுளம் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் திரும்பி காட்டாற்றில் சென்று கலந்து வருகிறது. ஆற்றில் அதிகம் தண்ணீர் வருவதால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பெரிய பாசன குளங்கள் நிரம்பி உள்ளன. கரைகள் பலமின்றி இருப்பதால் குளங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கீரனூர்
கீரனூர்பகுதியில் இடைவிடாத மழை பெய்து வருவதால் கீரனூரை சுற்றி உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையம் சாலை, அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதிகளில் மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. சாலை ஓரமாக இருந்த சலூன் கடைக்குள் மழை நீர் புகுந்ததால் வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாயினர்.
Related Tags :
Next Story