முயல் வேட்டையாடியவர் சிக்கினார்
பழனி அருகே முயல் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பழனி:
பழனி பகுதியில் தீபாவளியையொட்டி சட்டவிரோதமாக முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடுவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடந்த 4 நாட்களாக பழனி வனச்சரகர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அ.கலையம்புத்தூர் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது சுக்கமநாயக்கன்பட்டி பகுதியில் கையில் வலையுடன் சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த சின்னத்துரை (வயது 53) என்பதும், முயல்களை வேட்டையாடி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சின்னத்துரையை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள், வலை, டார்ச்லைட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினர், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வரும் நாட்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்தனர். பின்னர் முயல்கள் பழனி வனப்பகுதியில் விடப்பட்டன.
Related Tags :
Next Story