முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு கூறியதை ஏற்க முடியாது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு கூறியதை ஏற்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அ.தி.முக. எடுத்த எந்த நடவடிக்கையும் தி.மு.க. மேற்கொள்ளவில்லை. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு வேடிக்கையானது. தமிழகம், கேரளா இரு மாநில உறவுகள் மேம்பட வேண்டும் என்பதற்காக முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நான் பொதுப்பணித்துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர் என்ற முறையில் 14 முறை முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு சென்று தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட்ட பாக்கியம் பெற்று உள்ளேன். மேலும் ஆய்வும் செய்து இருக்கிறேன். அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் வசித்த இடத்திற்கு சென்று அதை பராமரிக்க உத்தரவு பிறப்பித்தேன்.
ஏற்க முடியாது
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2014, 2015, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. அப்போது கூட இரு மாநில உறவுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு கூறியதை ஏற்க முடியாது. புதிய அணையை மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி இல்லாமல் கட்டமுடியாது. இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது. இதனால் இரு மாநில மக்களிடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story