புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டிதீர்த்த பலத்த மழை 5 வீடுகள் சேதம், 2 மாடுகள் செத்தன
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. 5 வீடுகள் சேதமடைந்தன. 2 மாடுகள் இறந்தன.
புதுக்கோட்டை:
கொட்டித்தீர்த்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே வெளுத்து வாங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பலமாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பரவலாகவும் மழை பெய்கிறது. மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சராசரியாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை நகரில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
5 வீடுகள் சேதம்
இதேபோல மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பலமாக பெய்தது. இந்த மழையினால் மாவட்டத்தில் குடிசை மற்றும் ஓட்டுவீடுகள் உள்பட மொத்தம் 5 வீடுகள் சேதமடைந்தன. 2 மாடுகள் இறந்தன.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் ஏரிகள், குளங்கள் நீர் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே நிரம்பிய குளங்களில் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதேபோல ஒரு சில இடங்களில் குளங்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளாறு, அக்னியாறு, காட்டாறுகளில் தண்ணீர் பாய்ந்தோடுகின்றன. நீர்நிலைப்பகுதிகளில் கரையோரம் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கடையக்குடி அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. ஓரிரு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. அணைக்கட்டின் மறுபுறம் தண்ணீர் பாய்ந்தோடும் பகுதியில் சிலர் தூண்டில் மற்றும் வலை போட்டு மீன்பிடித்து வருகின்றனர்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கந்தர்வகோட்டை கோவிலூர் மேலத்தெருவை சேர்ந்த அன்புமணி என்பவர் ஓட்டு வீட்டின் சுவர் தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இவரது மனைவி மற்றும் 2 மகன்கள் அதிகாலையிலேயே எழுந்து சென்று விட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சுவர் மட்டும் இடிந்து விழுந்தது. தகவலறிந்த வட்டாட்சியர் புவியரசன், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மழைநீர் புகுந்தது
விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பெய்த கனமழையால் மீனவேலி கிராமம் வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் என்பவருடைய பசு மாடு செத்தது. ராஜாளிப்பட்டி கிராமம் பாட்னாபட்டியில் அழகம்மாள் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் வெளியிலேயே நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஊராட்சி சார்பில் உடனடியாக மின் மோட்டார் உதவியுடன் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
விராலிமலை அருகே தொடர்மழையால் இடையப்பட்டி தார்சாலை உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
குளங்கள் நிரம்பி வருகின்றது
விராலிமலை ஒன்றியத்தில் தொடர் மழையால் நீர்பழனி, ஆவூர், அவ்வையார்பட்டி, மாத்தூர், மண்டையூர், மதயானைபட்டி, கத்தலூர், குன்னத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளிலுள்ள குளங்கள் நிரம்பி வழிகிறது. மேலும் பல குளங்களில் அதிக அளவில் உபரி நீர் வெளியேறி வருகிறது. பாக்குடி ஊராட்சி பையூர் பெரியகுளம், பேராம்பூர் ஊராட்சி கல்லுப்பட்டி சின்னகுளம் ஆகிய குளங்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் முழுவதும் வெளியேறியது. இந்த தண்ணீர் வயல்வெளிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்து வெளியேறியதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். அப்பகுதியில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதும் பேராம்பூர் பெரியகுளத்தில் வந்து சேர்ந்து அந்த குளத்தில் உள்ள மூன்று கலிங்கிகள் வழியாகவும் சேதமடைந்துள்ள மதகுகள் வழியாகவும் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விராலிமலை ஒன்றியத்தில் தொடர் மழை பெய்து வருவதால் குளங்கள் மற்றும் கண்மாய்களை வருவாய் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் பெரிய கண்மாய் ஆன வல்லநாடு கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வல்லத்திரா கோட்டை அருகே மடையை திறந்து விட்டனர். திருவரங்குளம் பாசன குளமான புதுக்குளம், குருவகுளம், வடவார் குளம், கொளங்குளம், இடையன்குளம் உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவரங்குளம் பாசன குளமான புதுக்குளம் நிரம்பி கலிங்கி வழியாக வெளியேறி வருகின்றது.
சுவா் இடிந்து விழுந்தது
நெய்வாய்ப்பட்டியை சேர்ந்த ரெங்கையா என்பவரின் வீட்டு சுவர் மழையால் இடிந்து விழுந்தது. வீட்டின் சுவர் வெளிபுறமா விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு
மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-41, பெருங்களூர்-46, புதுக்கோட்டை-11, ஆலங்குடி-74, கந்தர்வகோட்டை-39, கறம்பக்குடி-18.60, மழையூர்-74.60, கீழணை-34.60, திருமயம்-30.80, அரிமளம்-27.60, அறந்தாங்கி-32, ஆயிங்குடி-37, நாகுடி-44.60, மீமிசல்-51.40, ஆவுடையார்கோவில்-20.40, மணமேல்குடி-51, இலுப்பூர்-56.20, குடுமியான்மலை-63.80, அன்னவாசல்-38.30, விராலிமலை-92, உடையாளிப்பட்டி-12, கீரனூர்-40, பொன்னமராவதி-47.20, காரையூர்-50.40. மாவட்டத்தில் நேற்று மொத்தம் 1,033.50 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. சராசரியாக 43.06 மில்லி மீட்டர் அளவு மழை பெய்திருந்தது.
Related Tags :
Next Story