ஒரு மாதத்துக்கு பிறகு கடலுக்கு சென்று திரும்பிய ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்


ஒரு மாதத்துக்கு பிறகு கடலுக்கு சென்று திரும்பிய ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 7 Nov 2021 11:18 PM IST (Updated: 7 Nov 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்தம், மழையால் ஒரு மாதத்துக்கு பிறகு கடலுக்கு சென்று மீன்பிடித்து, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர்.

ராமேசுவரம், 

வேலைநிறுத்தம், மழையால் ஒரு மாதத்துக்கு பிறகு கடலுக்கு சென்று மீன்பிடித்து, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர்.

வேலைநிறுத்தம்-மழை

ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் உற்பத்தி விலையில் டீசல் வழங்க வலியுறுத்தியும் கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தொடர் மழை மற்றும் பலத்த சூறாவளி காற்று வீசும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 550-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கரை திரும்பினர்

இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை இறால், கணவாய், நண்டு, சங்காயம் உள்ளிட்ட பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள். ஒரு மாதம் கழித்து மீன்பிடிக்க சென்று வந்த நிலையிலும் ஒரு சில படகுகளில் மட்டுமே ஓரளவு மீன்கள் கிடைத்திருந்தது. பெரும்பாலான படகுகளில் எதிர்பார்த்த அளவு மீன்கள் இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் கூறியதாவது:-
ஒரு மாதம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்த நிலையிலும் ஒரு சில படகுகளில் மட்டும்தான் அதிகமான மீன்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலான படகுகளில் மீன்கள் வரத்து குறைவு தான். நண்டுகளுக்கு மட்டுமே நல்ல விலை கிடைத்துள்ளது. சங்காயம் உள்ளிட்ட மற்ற அனைத்து வகை மீன்களுக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். 

களைகட்டியது

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத காரணத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமேசுவரம் துறைமுக கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால் துறைமுக பகுதி களை கட்டி காணப்பட்டது.

Next Story