87 அடியை தாண்டியதால் அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு


87 அடியை தாண்டியதால் அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 12:30 AM IST (Updated: 8 Nov 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

87 அடியை தாண்டியதால் அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

க.பரமத்தி,
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4 ஆயிரத்து 47 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தூவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக அணையின் நலன் கருதி உபரி நீர் திறக்கப்பட்டது.
எச்சரிக்கை
நேற்று மாலை 6 மணியளவில் அணையின் நீர்மட்டம் 87.64 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றுக்கு 1,600 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. 
அணையில் 3,834 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் அணையின் நலன் கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படும். இதனால் கரூர் மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கரூர் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story