வீட்டின் பூட்டை உடைத்து 130 பவுன் நகைகள் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 130 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 8 Nov 2021 2:12 AM IST (Updated: 8 Nov 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 130 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர

சமயபுரம்
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள பெரகம்பி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரும், இவரது மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அன்பழகனின் மனைவி லதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு லதா சென்றிருந்தார். 
இந்தநிலையில் அன்பழகன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் லதாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சென்னையில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 130 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் அதிகாரி விசாரணை
இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.
 இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story