ஊராட்சி மன்ற துணைத்தலைவியின் கணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவியின் கணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மனைவி விஜயா (36). பொம்மராஜுபேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவிராக பதவி வகித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை ரமேஷ் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமம் அருகே கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் பிணமாக கிடந்தார். அவரது உடலை பள்ளிப்பட்டு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு தேவையான வசதி திருத்தணி ஆஸ்பத்திரியில் இல்லை என்று அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்ததன் பேரில் ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேதபரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடல் நேற்று மதியம் பொம்மராஜுபேட்டை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ரமேஷின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு ஆர்.கே. பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் விரைந்து சென்றார். மேலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து ரமேஷின் உடல் அவரது வீட்டருகே ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story