மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி:
மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தூத்துக்குடியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மதியம் வரை நீடித்தது. மதியத்துக்கு பிறகு மாலை வரை லேசான தூறல் மட்டும் விழுந்தது. மாலை 5 மணியில் இருந்து மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் மழை காரணமாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் நடமாடவே முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். தற்காலிக பஸ் நிலையத்தை சகதிகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. வாழைகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூர் 1, காயல்பட்டினம் 1, விளாத்திகுளம் 2, வைப்பார் 8, சூரங்குடி 6, கீழஅரசடி 1, எட்டயபுரம் 1.2, சாத்தான்குளம் 1, தூத்துக்குடி 1 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மேலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை (புதன்கிழமை) வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், ஏற்கனவே தங்கு கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றைக்குள் (செவ்வாய்க்கிழமை) கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு சென்ற மீனவ கிராமங்களில் மீனவர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நடுக்கடலில் உள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு வருமாறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story