தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 81 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 81 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 81 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடுதல் மழைப்பொழிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 1.24 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. தூத்துக்குடி நகர்பகுதியில் மழை குறைவாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாவட்டத்தில் இதுவரை 20 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்து உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 639 குளங்களில், 74 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைக்கட்டில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதே போனறு கோரம்பள்ளம் குளத்தின் உயரம் 2.4 அடி ஆகும். தற்போது1.85 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் ஒரு மதகு மட்டும் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாததால் கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.
பாதிக்கப்படும் மக்களை
தங்க வைக்க 97 இடம்
மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் அடிப்படையில், பாதிப்பு ஏற்படக்கூடிய 36 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் அனைத்து துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால். அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 97 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்களை தங்க வைக்கும் போது, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து உள்ளோம். முதல்நிலை பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வட்டத்துக்கும் 30 பேர் வீதம் 1030 பேர் தேர்வு செய்து வைத்து உள்ளோம். அவர்களின் பணி தொடர்பான கையேடு கொடுத்து உள்ளோம். அவர்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், நேரு யுவகேந்திரா, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த6 ஆயிரம் பேரை அடையாளம் கண்டறிந்து உள்ளோம். அவர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்து உள்ளோம். இவர்கள் அரசின் தகவல்களை பொதுமக்களுக்கும், பொதுமக்களின் கருத்துக்களை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க பயன்படுத்தப்படுவர். அதே போன்று குளங்களில் தேங்கியுள்ள தண்ணீர் அளவு, குளங்களின் பாதுகாப்பு குறித்த நிலவரங்களையும் அரசுக்கு தெரிவிப்பர்.
81 வீடுகள் சேதம்
மழைகாரணமாக இதுவரை பயிர்கள் சேதம் அடையவில்லை. வயல்களில் தேங்கி உள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழை விவசாயிகளும் தண்ணீரை வடிய வைத்து, தோட்டக்கலை அதிகாரிகளின் வழிகாட்டுதலில் உரிய உரத்தை போட்டால் வாழைகள் சேதம் அடையாமல் வளரும். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 75 வீடுகள் பகுதியாகவும், 6 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 81 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 15 கால்நடைகள் இறந்து உள்ளன. மின்னல் தாக்கி 2 பேர் இறந்து உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
உரவிற்பனை
மேலும் உரங்கள் விற்பனையை முறைப்படுத்தும் வகையில் ஒரு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்டிக்கரில் குறிப்பிட்டு உள்ள விலை அடிப்படையில் உரங்கள் விற்பனை செய்யப்படும். இந்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story