நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தின் கீழ் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் (புதன்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே 2 நாட்கள் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மீன்பிடிக்க செல்லவில்லை
புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் தங்களது பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை மீன்பிடி துறைமுக கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக நாகை மீனவர்களின் வலைகளில் அழலை எனும் ஜெல்லி மீன் அதிகளவில் சிக்குகிறது. இதனால் அதிகளவு மீன்கள் வலைகளில் கிடைப்பதே இல்லை. எனவே நாகை மீனவர்கள் போதிய அளவு வருமானம் இன்றி இருந்து வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக புயல் உருவாகும் என தெரிவித்து மாவட்ட நிர்வாகம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளது. இதனால். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் மீனவர்களையும் கரை திரும்ப அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.
வேதாரண்யம்
இதேபோல வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோரம் உள்ள பைபர் படகுகளை கடற்கரையை விட்டு மேடான பகுதிகளுக்கு டிராக்டர் மூலம் இழுத்து சென்று பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். மீனவர்கள் வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று வருகின்றனர். மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது.
Related Tags :
Next Story