நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா
நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் அரசு நுகர்பொருள் வாணிப கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு வருடந்தோறும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி போனசாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.8 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது.
இந்த கிட்டங்கியில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் அந்தோணி(வயது 38). இவருக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று அந்தோணி தனது மனைவி, மகனுடன் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் உள்ள அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள அதிகாரிகளிடம், இந்த ஆண்டுக்குரிய தீபாவளி போனஸ் எனது வங்கி கணக்குக்கு வரவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவர், தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து திடீரென மனைவி மகனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அலுவலக சூப்பிரண்டு அருண்குமார் மற்றும் போலீசார் அந்தோணியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தீபாவளி போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தோணி தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story