கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் துணை பிரதமர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் தேனி ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு
“கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் துணை பிரதமர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்” என தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தேனி:
முல்லைப்பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்கக்கோரியும், தமிழக, கேரள அரசுகளை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக இருந்த காலத்தில் அணையில் 10 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்பட்டது. இதன்மூலம் 2.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டபோது பாசன பரப்பு 71 ஆயிரம் ஏக்கராக குறைந்தது. அணையில் 142 அடியாக தண்ணீர் தேக்கினால் 1.70 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஆனால், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசுக்கு அக்கறையில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்தபோது, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மீறி கேரள அரசு முறைகேடாக தண்ணீர் திறந்தது. இதுகுறித்து முறையாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
பகல் கனவு
பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்ததாக, சம்பந்தமே இல்லாமல் தமிழக முதல்-அமைச்சர், கேரள முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கேரள அரசு மரங்களை வெட்ட அனுமதி அளிக்கவில்லை என கூறிவிட்டது. கேரள அரசு அனுமதி கொடுக்காதது தெரியாமல் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
எதற்காக மு.க.ஸ்டாலின் இதை செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு கனவு இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் துணை பிரதமராக மு.க.ஸ்டாலின் வரப்போகிறாராம். அதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் துணை நிற்க போகிறார்களாம். குறிப்பாக கேரள கம்யூனிஸ்டு கட்சியினர் ஆதரவு கொடுப்பார்களாம். மு.க.ஸ்டாலின் துணை பிரதமர் ஆக வேண்டும் என்றும், அவருடைய மகன் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வேண்டும் என்றும் கனவு காண்கிறார். அது பகல் கனவாகி போகும். வரும் தேர்தலில் 400 பா.ஜனதா எம்.பி.க்கள் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் அணையில் இருந்து கேரள மந்திரிகள் தண்ணீர் திறந்து விட்ட சம்பவத்துக்கு, தங்களின் தவறை உணர்ந்து மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல், அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க. சும்மா இருக்காது.
தமிழக உரிமைக்காக கேரளாவை நோக்கியும், முல்லைப்பெரியாறு அணையை நோக்கியும் செல்ல தயாராக உள்ளோம். தற்போது உலகில் பலமான அணை முல்லைப்பெரியாறு அணை தான். சுப்ரீம் கோர்ட்டு நியமித்த 2 கமிட்டிகள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்றும், 142 அடி தண்ணீர் தேக்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. நமக்கும் கேரள மக்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்துவதால் கேரள மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஒரு லட்சம் மக்கள்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக கம்யூனிஸ்டுகள் தற்போது யார் பக்கம் இருக்கிறார்கள் என தெரிவிக்க வேண்டும். அவர்கள் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பக்கம் தான் நிற்பார்கள். எனவே தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த போராட்டம் இத்துடன் முடிய போவது இல்லை. விரைவில் முல்லைப்பெரியாறு அணையை நோக்கி ஒரு லட்சம் மக்கள் செல்ல தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது முல்லைப்பெரியாறு அணையின் தமிழக உரிமைகளை மீட்கக்கோரியும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், தமிழக, கேரள அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், பா.ஜ.க. வக்கீல்பிரிவு மாநில துணைத்தலைவர் வி.வணங்காமுடி மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 400 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு
ஆர்ப்பாட்டத்தை முடித்த பின்னர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பெரியகுளத்துக்கு சென்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அண்ணாமலையிடம் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்த படத்தை ஓ.பன்னீர்செல்வம் காட்டினார். பின்னர் இருவரும் தனியாக 10 நிமிடம் அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.
Related Tags :
Next Story