40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் கனமழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் கனமழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண்மை இயக்குனர் ஆய்வு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 10 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மழையினால் ஏற்பட்ட பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்மை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்தது.
இதையடுத்து விவசாயிகள் நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாத்திடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர். வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படாததாலும், ஆறுகளில் தண்ணீர் அதிகமாக சென்றதால் வடிய வாய்ப்பு இன்றி தொடர்ந்து வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனல் பயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் கனமழை
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தில் கன மழை மீண்டும் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சம்பா, தாளடி வயல்களில் மழைநீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கன மழை பெய்வதால் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. நடவு செய்யப்பட்ட வயல்களில் 30 நாட்களான இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
கரைகள் உடையும் அபாயம்
மாவட்டம் முழுவதும் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது. மேலும் கடைமடை பகுதி என்பதால் காட்டாறு, வெட்டாறு போன்ற ஆறுகளிலும் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே திருவாரூர் அருகே வெட்டாற்றில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் மழை நீடித்தால் பல ஆறுகளில் பலவீனமான கரைகள் உடையும் அபாய நிலை இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
திருவாரூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வேளாண் அதிகாரிகள் பயிர்கள் பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
குடவாசல்-27, திருவாரூர்-16, வலங்கைமான்-16, பாண்டவையாறு தலைப்பு-15, நன்னிலம்-12, மன்னார்குடி-9, நீடாமங்கலம்-8, திருத்துறைப்பூண்டி-5. முத்துப்பேட்டை-1.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்தநிைலயில் மீண்டும் கனமழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
நன்னிலம்
நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெய்த மழையில் நன்னிலம் அருகே அரசு விதை பண்ணையில் நடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மழைநீர் இன்னும் ஓரிரு நாட்களில் வடியவில்லை என்றால் நெற்பயிர்கள் அழுகும் நிலை உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மழையால் நன்னிலம் அருகே சேங்கனூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த சோமநாதசாமி கோவிலின் முன் மண்டபம் இடிந்து விழுந்தது.
மன்னார்குடி
மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மன்னார்குடி வி.பி.என். தெருவில் மழைநீர் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story