தொடர் மழையால் மணிமுக்தா கோமுகி வீடூர் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மணிமுக்தா கோமுகி மற்றும் வீடூர் ஆகிய அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
கள்ளக்குறிச்சி
கோமுகி அணை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அங்கிருந்து உற்பத்தியாகி வரும் பொட்டியம், கல்படை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோமுகி அணை நிரம்பியுள்ளது. எனவே அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் நீர் வரத்து அதிகரித்ததால் மாலையில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மணிமுக்தா அணை
அதேபோல் கல்வராயன் மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் 25.70 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் கடந்த 5 நாட்களில் 34 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் அணைக்கு வினாடிக்கு 1,567 கன அடி நீர் வரத்து காணப்பட்டது. இது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மணிமுக்தா அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன் ஆகியோரிடம் அணையின் நிலவரத்தை கேட்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிர கண்காணிப்பு
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள் நிரம்பி வருகிறது. நீர் நிலைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 1,567 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுள்ளது. இதனால் மணிமுக்தா ஆற்றங்கரையின் இருபுறமும் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னறிவிப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழை நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து செம்படாக்குறிச்சி, மாதவச்சேரி, வெங்கடாம்பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டு போதுமான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும், தொடர்புடைய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
வீடூர் அணை
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா விக்கிரவாண்டி அடுத்துள்ள 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணைக்கு தொடர்மழை காரணமாக தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 31.5 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை முதல் வினாடிக்கு 2,600 கனஅடி நீர் 5 மதகுகள் வழியாக சங்கராபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேலும் சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையே அணைக்கு வரும் தண்ணீர் அளவு மற்றும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம், பாலாஜி, கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே அணையையொட்டியுள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வீடூர், சிறுவை, கொம்பூர் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அணையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அணையில் உள்ள கரை வழியாக சென்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story