விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 10:45 PM IST (Updated: 8 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விழுப்புரம், 

பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து, நேற்றும் மழை நீடித்தது. அதிகாலை 5 மணி முதல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் அனைத்து பள்ளி- கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
நள்ளிரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்த நிலையில் நேற்றும் விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் காலை 7 மணியில் இருந்து இரவு வரை இடைவிடாமல் மழை தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது

பலத்த மழையினால் விழுப்புரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் தாழ்வான பகுதிகளான கம்பன் நகர், ஆசிரியர் நகர், பாண்டியன் நகர், மணி நகர், சுதாகர் நகர், சித்தேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. அதுபோல் விழுப்புரம் தாமரைக்குளம், வழுதரெட்டி, வி.மருதூர் ஏரிக்கரை, விழுப்புரம் ஹைவேஸ் நகர் காவிரி வீதி, சாலாமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததோடு ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் கனமழையின் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அனைத்து பஸ்களும் பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு சாலையோரம் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச்சென்றன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு பஸ் எங்கு நிற்கிறது என்று தெரியாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி அங்கும், இங்குமாக ஓடிச்சென்று பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.

நெற்பயிர்கள் மூழ்கின

இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று புதிய பஸ் நிலையம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மழையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் அருகே பெரும்பாக்கம், கோனூர், கொத்தமங்கலம் பகுதியில் உள்ள 20 ஏக்கர் உள்பட மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

திண்டிவனம்

தொடர்மழை காரணமாக திண்டிவனம் ராஜாங்குளம் மற்றும் கிடங்கல்-1 ஏரிகள் நேற்று நிரம்பி, தண்ணீர் தரைப்பாலம் வழியாக வழிந்தோடி வருகிறது. ஆபத்தை உணராமல் அப்பகுதி மக்கள் தரைப்பாலத்தை கடந்து சென்றனா். இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி, பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்தனர். மேலும் இந்த கனமழை காரணமாக திண்டிவனம் வகாப் நகர், நல்லியக்கோடன் நகர் விரிவு, அண்ணா நகர், இருதயபுரம் பகுதிகளில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கடும் அவதிடையந்த பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். நேற்று காலை முதல் பெய்த கனமழையால் திண்டிவனம் நகரில் உள்ள தாழ்வான உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் அதிகாரிகளுடன் திண்டிவனம், மயிலம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகளிடம் மழைவெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்வதோடு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினர். முன்னதாக மயிலம் அடுத்த மயிலாடும்பாறையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன், தொடர்மழையால் பாதிக்கப்பட்ட  பழங்குடியினர் மற்றும் நரி குறவர்களுக்கு உடனடியாக தங்க இடமும், உணவு வசதி ஏற்படுத்தி கொடுப்பதோடு, ஒரு வாரத்தில் வீட்டுமனை பட்டா, குடிநீர், மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் திண்டிவனம் சப்-கலெக்டருக்கு உத்தரவிட்டார். அப்போது தாசில்தார் வசந்த கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கிடம், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர், நரிக்குறவர் குடும்பங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடம், அரசு விடுதிகள், அங்கன்வாடி மையங்கள், கிராமப்புற சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

சாலையில் விழுந்த புளியமரம் 

மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் புதுச்சேரி செல்லும் சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று நேற்று மதியம் பெய்த மழையின்போது சாலையின் குறுக்கே விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, புளியமரத்தை வெட்டி அகற்றினர். இதனால் மயிலம்-புதுச்சேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரக்காணம்

மரக்காணம், கூனிமேடு, எக்கியார்குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் பெய்த கனமழையினாலும், கடல் அலைகள் வழக்கத்திற்கும் மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டதாலும் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது விசைப்படகுகள், பைபர் படகுகளை கடலோரங்களில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். அதுபோல் மரக்காணம் பகுதியில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

மேலும் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், ஆரோவில், வானூர், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதுபோல் தென்பெண்ணையாறு, பம்பைஆறு, மலட்டாறு, வராக நதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக எல்லீஸ்சத்திரம், தளவானூர், மல்லிகைப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி 2 கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச்செல்கிறது. திருப்பாச்சனூர் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நரி ஓடையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 76 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மரக்காணம்- 76
வல்லம்- 70
நேமூர்- 68
வளவனூர்- 67
முகையூர்- 63
கோலியனூர்- 60
மணம்பூண்டி
- 54
கெடார்- 50
திண்டிவனம்- 50
சூரப்பட்டு- 46
கஞ்சனூர்- 45
அனந்தபுரம்- 42
விழுப்புரம்- 41
முண்டியம்பாக்கம்- 40.50
வானூர்- 21
செஞ்சி- 18
செம்மேடு- 18
அரசூர்- 18
வளத்தி- 17
திருவெண்ணெய்நல்லூர்- 17
அவலூர்பேட்டை- 14

Next Story