மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரையூர்:
பொன்னமராவதி தாலுகா, காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் கீழத் தெருவை சேர்ந்த கருப்பையா மனைவி தருமு அம்மாள் (வயது 60). இவர் காரையூர் செல்லும் சம்பப்பட்டி பாலம் அருகே மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் பொன்னமராவதி செல்வதற்கு மூதாட்டியிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது அதில் 2 பேர் மூதாட்டியின் அருகில் வந்து கேட்டுள்ளனர். இதில் ஒருவர் தருமு அம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் தாலிச்சங்கிலி என மொத்தம் 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஆட்டோவில் இருவரும், மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அறிந்த தருமு அம்மாள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சம்பவத்தை அறிந்து திருடர்களை விரட்டி பிடித்துள்ளனர். இதில் மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்த 18 வயது சிறுவன், மேல அனுப்பாண்டி வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அன்பழகன் (38), ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் இலுப்பூர் துைண போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மற்ற 2 பேரையும் தேடினர். அப்போது கரையாம்பட்டி கண்மாய் பகுதியில் குளித்துவிட்டு சந்தேகம் ஏற்படும் வகையில் ஒருவர் நின்றுள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்தபோது சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் கீழதுரை வேதபிள்ளை தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சரவணபாண்டி (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 பவுன் சங்கிலி, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story