371 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின


371 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின
x
தினத்தந்தி 8 Nov 2021 11:59 PM IST (Updated: 8 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 371 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 371 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின.

தொடர் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று  இரவு முதல் இன்று மதியம் வரை தொடர்ந்து மிதமான சாரல் மழையும், சில பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த தொடர் சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

மேலும் சாலையில் சென்றவர்கள் கையில் குடையுடனும், மழை கோட் அணிந்தபடியும் சென்றனர். அதுமட்டுமின்றி மழையுடன் கூடிய குளிர்ந்த காற்றும் வீசியது. மதியத்திற்கு மேல் சாரல் மழை விட்டு, விட்டு லேசாக பெய்தது. நேற்று முதல் பெய்து வரும் மழையில் அதிகபட்சமாக செங்கத்தில் 76.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 
கீழ்பென்னாத்தூர்- 38.2, தண்டராம்பட்டு- 33, போளூர்- 32.6, செய்யாறு- 32, வெம்பாக்கம்- 30, ஜமுனாமரத்தூர்- 27, வந்தவாசி- 25, சேத்துப்பட்டு- 20, ஆரணி- 15.5, கலசபாக்கம்- 15, திருவண்ணாமலை- 10.

சாத்தனூர் அணை

மாவட்டத்தில் உள்ள அணைகளில் தற்போது சாத்தனூர் அணையில் 97.45 அடியில் தண்ணீர் உள்ளது. மேலும் வினாடிக்கு 1540 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குப்பநத்தம் அணையில் 57.07 அடியில் தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 மிருகண்டாநதி அணையில் 20.83 அடியில் தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 53 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. செண்பகதோப்பு அணையில் 54.32 அடியில் தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 128 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதில் வினாடிக்கு 37 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஏரிகள்

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 600 பெரிய ஏரிகள் உள்ளது. இதில் 186 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 55 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலும், 85 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 204 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும் தண்ணீர் உள்ளது. மற்ற 70 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் உள்ளது. 

அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 18 ஒன்றியங்களிலும் 1286 ஏரிகள் உள்ளது. இதில் 185 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் 90 சதவீதத்திற்கு மேலும், 95 ஏரிகள் 80 சதவீதத்திற்கு மேலும், 167 ஏரிகள் 70 சதவீதத்திற்கு மேலும், 312 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 352 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும் தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 159 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாக தண்ணீர் உள்ளது.

கண்ணமங்கலம் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக கண்ணமங்கலம் வழியாக ஓடும் நாகநதியில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் செங்கம் செய்யாற்றில் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் செங்கம் செய்யாறு கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story