வேலூர் மாநகராட்சியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட பூங்காக்கள்


வேலூர் மாநகராட்சியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட பூங்காக்கள்
x
தினத்தந்தி 9 Nov 2021 12:02 AM IST (Updated: 9 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் பராமரிப்பின்றி பூங்காக்கள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் பராமரிப்பின்றி பூங்காக்கள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி பூங்கா

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் சாலைகள், கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக புதிதாக பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காக்களை சீரமைத்தல் போன்ற பணிகளும் நடக்கிறது.

மாநகராட்சி பகுதி முழுவதும் மக்களின் பொழுது போக்கிற்காக ஏராளமான பூங்காக்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டன. இந்த பூங்காக்களில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உண்டு. இவை தவிர நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, இளைப்பாற இருக்கைகள் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தநிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அங்கு குப்பைகள் நிறைந்து, செடி கொடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பயன்பாடின்றி காணப்படுவதால் அந்த பணம் பெரும் இழப்பாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பராமரிப்பின்றி...

வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடியிருப்பு பகுதிகளில் பூங்காக்கள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்தன. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் சார்பிலும் ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இந்த பூங்காக்களில் பெரும்பாலான பூங்காக்கள் தற்போது பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. சில பூங்காக்கள் மக்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டவை தற்போது பயன்பாடு இன்றி உள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது.

சர்க்கரைநோய் உள்ளவர்கள், முதியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் என மக்கள் பலர் பூங்காக்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாலும், பராமரிக்கப்படாததாலும் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் செடி, கொடிகள் சூழ்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் காணப்படுகிறது. அங்கு விஷப்பூச்சிகள் அதிகமாக உலா வருகின்றது. நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பூங்காவை சீரமைப்பது தொடர்பான ஒப்பந்த பிரச்சினை உள்ளதாக கூறுகின்றனர். பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். பூங்காக்களை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடுவார்களா?, அல்லது காட்சிபொருளாகவே வைத்திருப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story