உயிர்சேதம் ஏற்படாமல் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் உயிர் சேதம் ஏற்படாமல் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் உயிர் சேதம் ஏற்படாமல் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முகாம் அலுவலகங்களில் தங்கி...
ஏரி, ஏரிக்கரைகளில் மின் கம்பங்கள், மரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேவையான அளவு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் தேவையில்லாமல் மழை நேரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பரவலை தடுக்க பொது சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் முகாம் அலுவலகத்திலேயே தங்கி 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும்.
உயிர்சேதம் ஏற்படாமல்
வேளாண்துறை அலுவலர்கள் பயிர் சேதங்கள் குறித்து உடனுக்குடன் அறிக்கை அளிக்க வேண்டும். மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ள இடங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு நேரத்தில் மின் இணைப்பை துண்டிக்கலாம். ரேஷன் கடைகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை முறையாக ஆய்வு செய்து, எவ்வித சேதாரமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலர்களும் இந்த மழைக் காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். மழை வெள்ளத்தால் மனித மற்றும் கால்நடை உயிர் சேதம் ஏற்படாமல் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story