தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Nov 2021 1:16 AM IST (Updated: 9 Nov 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

அடிப்படை வசதிகள் தேவை
ராசிபுரம் வட்டம் வடுகம் கிராமம் ஆதிதிராவிடர் தெரு 3-வது வார்டில்  400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 
-ஊர்பொதுமக்கள், வடுகம், ராசிபுரம்.
சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் 
ஓமலூர் 14-வது வார்டில் உள்ளது கள்ளிக்காடு. இங்குள்ள கோவிலின் அருகில் பேவர்பிளாக்கால் போடப்பட்ட ரோடு சாக்கடை ஓரத்தில் உள்ளது. சாலை ஓரத்தில் இருந்த கற்கள் உடைந்து சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக இங்கு துர்நாற்றம்வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே சாக்கடை கால்வாயை சீரமைத்து கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கள்ளிக்காடு, ஓமலூர்.
உடைந்த பாதாள சாக்கடை
ராசிபுரம் வட்டம் கூனவேலம்பட்டி ஊராட்சியில் பாலப்பாளையம் உள்ளது.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு   ஏற்பட்டது. இதனால் அந்த வழியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  பயன்படுத்த அச்சப்படுகின்றனர். ஒரு சிலர் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் போது பாதாள சாக்கடை உடைப்பு இருப்பது தெரியாமல் அதில் விழுந்து விடுகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-ஊர்பொதுமக்கள், பாலப்பாளையம், ராசிபுரம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
சேலம் மெரமனூர் 4 ரோடு அவுசிங் பகுதியில் சாக்கடை கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் செல்கிறது. இதுபோன்று அடிக்கடி கழிவுநீர் கால்வாய் உடைந்து விடுகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து அங்கு நோய் பரவும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பெரமனூர், சேலம்.
குண்டும், குழியுமான சாலைகள்
சேலம் அம்மாபேட்டை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையில் கடும் சிரமத்துக்கு இடையே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பயணிக்கும் நிலை உள்ளது. மழைக்காலம் என்பதால் இந்த சாலைகள் இன்னும் மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
-ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.

சேலம் நரசோதிப்பட்டியில் இருந்து 5 ரோடு செல்லும் வழியில், மேம்பாலம் தொடங்கும் முன்பு சாலை நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளம் தெரியாததால் எதிர்பாராதவிதமாக வாகன ஓட்டிகள் அதில் விழுந்து அடி படுகின்றனர். பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்க வேண்டும்.
-செல்வம், நரசோதிப்பட்டி, சேலம்.

தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலை உள்ளது. இந்த சாலையில் புரோக்கர் ஆபீஸ் முதல் ராமாக்காள் ஏரி, பழைய தர்மபுரி வரை உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் பகுதி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் பல இடங்கள் சமதளமற்று குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தடுமாற்றத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கின்றன. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த பகுதியில் தார் சாலையை முறையாக சீரமைத்து, அதன்மூலம் வாகன விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுப்பார்களா?
-கணேஷ்குமார், பழைய தர்மபுரி.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி 10-வது வார்டில்  தே. கொல்லப்பட்டி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள் . நீண்டகாலமாக இந்த பகுதியிலிருந்து மயானம் வரை செல்லும்  சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு தார்சாலை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.இளங்கோவன், தே.கொல்லப்பட்டி, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
நாமக்கல் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதேபோல் வகுரம்பட்டி ஊராட்சியிலும் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக மாருதிநகர், பொன்விழாநகர் போன்றவை அரசு குடியிருப்பு உள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் சாலைகளில் அணிவகுத்து நிற்கும் தெருநாய்கள் இரவில் அந்த வழியாக செல்லும் நபர்களை துரத்தி கடிப்பது, இதற்கு பயந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே  இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சரவணன், நாமக்கல்.

கிருஷ்ணகிரியில் டவுன் பகுதியிலும், அக்ரஹாரம், முல்லை நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நாய் கடியால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி வாகனங்களுக்காக காத்திருக்க கூடிய மாணவ, மாணவிகளும் நாய்களை கண்டு அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணவேணி, கிருஷ்ணகிரி.

சேறும், சகதியுமான சாலை
கிருஷ்ணகிரியில் அவதானப்பட்டி ஏரிக்கரை அருகில் மானிக்கொட்டாய் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது மழையில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-வினோத்குமார், கிருஷ்ணகிரி.

Next Story