தஞ்சை பெரியகோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள 1036-வது சதய விழாவையொட்டி நேற்றுகாலை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள 1036-வது சதய விழாவையொட்டி நேற்றுகாலை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சதயவிழா
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் கட்டிட கலைக்கும், ஓவிய கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி மாமன்னன் ராஜராஜசோழனின் 1036-வது சதய விழா வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இடம்பெறும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வீதிஉலா ஆகியவற்றுடன் 2 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஒரு நாள் மட்டுமே நடத்தப்படுகிறது.
பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
சதயவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. இதற்கு சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் மேத்தா, தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்ய விழா நடைபெறும் 13-ந் தேதி காலை 7 மணிக்கு பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருள்களால் பேரபிஷேகமும், பிற்பகல் 1 மணிக்கு பெருந் தீப வழிபாடும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்திற்குள் சுவாமி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
Related Tags :
Next Story