காதல் விவகாரத்தில் வாலிபர் கொலையா?
பூதப்பாண்டி அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பெண்ணுடன் காதல்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளைபுதூரை சேர்ந்த சொர்ணப்பன் மகன் சுரேஷ்குமார் (வயது 27). இவர் பி.காம் படித்து விட்டு, பெயிண்டிங் வேலையை காண்டிராக்டு எடுத்து செய்து வந்தார்.
இவர் அழகியபாண்டியபுரம் அருகே உள்ள காட்டுபுதூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் சுரேஷ்குமார்் வீட்டுக்கு வந்த பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப்ராஜ் காட்டுப்புதூரை சேர்ந்த ஒருவர் சுரேஷ்குமார் மீது புகார் கொடுத்து உள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டியது உள்ளது என்று சுரேஷ் குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளார்.
சாவில் மர்மம்
அதைத்தொடர்ந்து சுரேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு
மாலை 5 மணி ஆகியும் சுரேஷ்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய அண்ணன் சுமன்ஆனந்த் மற்றும் தனது நண்பர்களுடன் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்கு தனது தம்பி இல்லாததால், காட்டுப்புதூருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள சிவன்கோவில் தெப்பக்குளம் அருகே ரோட்டோரத்தில் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிள் நின்றது. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று பார்த்த போது, அங்கு சுரேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமன் ஆனந்த் தனது தம்பியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சுரேஷ்குமார் இறந்து விட்டதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சுரேஷ்குமாரின் உறவினர்களிடம் போலீஸ் துணைசூப்பிரண்டு கல்யாணசுந்தரம், இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொலையா?
அதைத்தொடர்ந்து சுமன்ஆனந்த் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் ‘என் தம்பி காதலித்த பெண், தன்னை பெண் கேட்க வரும்படி சுரேஷ்குமாரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் 18-ந்தேதி இளம்பெண் வீட்டாருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது சுரேஷ்குமாருக்கு, இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். அந்த இளம்பெண்ணுடன் சுரேஷ்குமார் பேசினால், அவ்வளவு தான் என்று அந்த இளம்பெண்ணின் அண்ணன்கள் மிரட்டினார்கள். அதே போல் எனது தம்பியை, அவர் காதலியின் உறவினர்கள் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்து, வாயில் விஷத்தை ஊற்றியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் சுரேஷ்குமார் சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்்கள்.
மழையில் போராட்டம்
இதற்கிடையே சுரேஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. முன்னதாகவே சுரேஷ்குமாரின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர்.
அவர்கள் பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் உடலை வாங்க மறுத்து கொட்டும் மழையில் பாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story