போலீஸ்காரர் மகன் கொலை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
கலபுரகியில், போலீஸ்காரர் மகன் கொலை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்விரோதத்தில் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
போலீஸ்காரர் மகன் கொலை
கலபுரகி மாவட்டம் (டவுன்) வித்யாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அபிஷேக் (வயது 24). இவரது தந்தை போலீஸ்காரர் ஆவார். அதாவது கலபுரகி டவுனில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அபிஷேக்கின் தந்தை போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி கலபுரகி பஸ் நிலையத்தில் வைத்து அபிஷேக்கை மா்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தாா்கள்.
பஸ் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
6 பேர் கைது
இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் வீடியோவில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அபிஷேக்கை கொலை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள்
விசாரணையில், அவர்கள் பெயர் சாகர், ஆகாஷ் ஜாதவ், முர்துஜா, சுபம், அபிஷேக், கவுசிக் என்று தெரிந்தது. இவர்களில் சாகரை தவிர மற்ற 5 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். கொலையான அபிஷேக் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
மேலும் சாகரை, அபிஷேக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கி கொலை செய்ய முயற்சித்து இருந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சாகர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அபிஷேக்கை கொலை செய்தது தெரியவந்தது. கைதான 6 பேர் மீதும் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story