கர்நாடகத்தில் புதிய மணல் கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல்
கர்நாடகத்தில் புதிய மணல் கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு டன் மணல் ரூ.700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
மந்திரிசபை கூட்டம்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் புதிய மணல் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து, ஆறு, கடல் சார் மணல் என்று மூன்று நிலைகளை உருவாக்கியுள்ளோம். கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்படும் மணல் டன்னுக்கு ரூ.300 எனவும், ஆற்று மணல் டன்னுக்கு ரூ.700-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் மணல் சேகரித்து வைத்து விற்கப்படும். அந்த மணல் விற்பனையில் வரும் வருவாயில் 25 சதவீதம் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.
மணல் எளிதாக கிடைக்கும்
ஆற்று மணல் விற்பனை செய்ய ஒரு குழு அமைக்கப்படும். கர்நாடகத்தில் இனி மணல் எளிதாக கிடைக்கும். தட்சிண கன்னடாவில் கடல் அல்லாத பகுதியில் தண்ணீரில் மூழ்கி மணல் எடுக்கிறார்கள். அது தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எக்காரணம் கொண்டும் எந்திரம் கொண்டு மணல் எடுக்கக்கூடாது. இந்த புதிய மணல் கொள்கையால், இனி மணல் ஒரு லாரி லோடு அதிகபட்சமாக ரூ.12-க்கு கிடைக்கும். நேரடியாகவோ அல்லது ஆன்லைனில் பதிவு செய்தோ மணல் பெறலாம்.
கனிமவள சுரங்க விதிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய சுரங்க தொழில்களுக்கு 50 ஆண்டுகள் வரை குத்தகை வழங்கப்படுகிறது. அதே போல், மற்ற சிறிய சுரங்க தொழிலுக்கும் 50 ஆண்டுகள் குத்தகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாரியில் சுரங்க மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 கோடி செலவில் சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளோம்.
நெசவாளர்களுக்கு உதவி
நெசவாளர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ரூ.376 கோடி உதவி திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதில் கைத்தறி தொழில் செய்யும் நெசவாளர்களுக்கு கடன், மானியம், வட்டி மானியம் வழங்கப்படும். உத்தர கன்னடா, பெலகாவி, தார்வார், விஜயாப்புரா, கதக், பாகல்கோட்டை, ஹாவேரி ஆகிய மாவட்டங்கள் இதுவரை மும்பை-கர்நாடகா என்று அழைக்கப்பட்டு வந்தது. இனி அந்த பகுதி கித்தூர்-கர்நாடகா என்று அழைக்கப்படும்.
கர்நாடகத்தில் நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் நியமன பணிகளில் சில குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் மொத்தம் உள்ள பணி எண்ணிக்கையில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். அதன் பிறகு நியமன, பதவி உயர்வு மேற்கொள்ளப்படும். அரசு திட்டங்களுக்கான டெண்டரில் ரூ.50 கோடிக்கு மேற்பட்ட பணிகளுக்கு அனுமதி பெற ஒரு குழு அமைக்க வேண்டும்.
50 மருத்துவ இடங்கள்
அதனால் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 2 பேர் தொழில்நுட்ப நிபுணர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அந்த குழுவின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். தேவையின்றி திட்ட மதிப்பீட்டை அதிகரிப்பது போன்ற விஷயங்கள் தடுக்கப்படும். 15 நாட்களுக்குள் அந்த குழு, டெண்டர் விஷயங்கள் மீது முடிவு செய்ய வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருந்தால் மேலும் ஒரு குழு அமைக்கப்படும்.
ரூ.471 கோடியில் மருந்து-மாத்திரைகளை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளோம். சாம்ராஜ்நகர் மருத்துவ கல்லூரியில் கூடுதலாக ரூ.166 கோடியில் 700 படுக்கைகள் அமைக்கும் வகையில் கட்டிடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைக்கும். தீயணைப்புத்துறையில் ஒரு செயல் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதற்காக ரூ.399 கோடி செலவில் அந்த திட்டம் அமல்படுத்தப்படும். கட்டமைப்பு வசதிகள், புதிய தீயணைப்பு நிலையங்கள் தொடங்குதல் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, மேற்கு நோக்கி பாயும் தண்ணீரை தடுத்து நிறுத்த ரூ.3,900 கோடியில் கின்டி அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.500 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் ஒரு தடுப்பணை கட்ட ரூ.11.34 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் உள்ள 69 ஏக்கர் அரசு நிலம், பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான மனைகளை வாடகைக்கு எடுத்து, சிலர் அதற்கான வாடகையை செலுத்தாமல் உள்ளனர். அதில் பள்ளிகள், கோவில்கள் மற்றும் அனாதை ஆசிரமங்களை நடத்துகிறவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கர்நாடக நகராட்சிகள் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம்.
ரூ.2,000 கோடி கட்டணம்
இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி, சி.சி., ஓ.சி.க்கு பெங்களூரு மாநகராட்சி கட்டணம் வசூலித்து வருகிறது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஐகோர்ட்டு, எதன் அடிப்படையில் இந்த கட்டணத்தை வசூலிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று ஐகோர்ட்டு சொல்கிறது. ஐகோர்ட்டு வழங்கிய ஆலோசனைப்படி இந்த சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் மீது தவறு இல்லை. மாநகராட்சி விதிமுறைகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தில் அந்த அம்சம் இடம் பெறவில்லை. அதனால் அவசர சட்டத்தை பிறப்பிக்கிறோம்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.
கோலார்-சிக்பள்ளாப்பூர் பால் கூட்டமைப்பு பிரிப்பு
தார்வார் பால் கூட்டமைப்பு பிரிக்கப்பட்டு, ஹாவேரி பால் கூட்டமைப்பு உருவாக்கவும், கோலார்-சிக்பள்ளாப்பூர் பால் கூட்டமைப்பை பிரித்து கோலார், சிக்பள்ளாப்பூரில் தனித்தனியாக பால் கூட்டமைப்பு அமைக்கவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிக்பள்ளாப்பூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்துவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அங்கு கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய மந்திரி மாதுசாமி, பெலகாவியில் சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும், இதற்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை
மந்திரி மாதுசாமி கூறுகையில், "மேகதாது திட்டம் குறித்து இன்று (நேற்று) ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தலைமையில் நடைபெற இருந்தது.
ஆனால் சில காரணங்களால் இந்த கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடைபெறும்போது, மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளோம்" என்றார்.
Related Tags :
Next Story