கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் உள்பட 2 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் உள்பட 2 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் இருவருக்கும் மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கூடலூர் கிளை சிறையில் 2 வார நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2 பேரையும் சோலூர்மட்டம் போலீசார் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நேரடி விசாரணை
தொடர்ந்து 2 பேரையும் கேத்தி, கோவையில் உள்ள ரகசிய இடங்களில் வைத்து பல்வேறு கேள்விகள் கேட்டு, முக்கிய தகவல்களை போலீசார் பதிவு செய்தனர். மேலும் சேலம் ஆத்தூரில் விபத்தில் இறந்த கனகராஜ் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்த பகுதிக்கு போலீசார் தனபால், ரமேஷ் இருவரை அழைத்து சென்று நேரடியாக விசாரணை நடத்தினர்.
தனபாலிடம் 11 நாள், ரமேஷிடம் 10 நாள் காவல் விசாரணை நிறைவடைந்தது. தொடர்ந்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் நேற்று ஊட்டி கோர்ட்டில் போலீசார் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை அழைத்து வந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய தனபால், ரமேஷ், ஆகிய 2 பேருக்கு மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற 22-ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் ஜாமின் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story