ஆலந்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, அரிசி - டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார்
ஆலந்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குஉணவு, அரிசி, மருத்துவ கிட் ஆகியவற்றை டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார்.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, நலத்திட்டங்களை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து ஆலந்தூர் மாதவபுரம், கண்ணன் காலனி, ஆதம்பாக்கம் சமையல் கூடம் ஆகியவற்றை தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அரிசி, மருத்துவ கிட் ஆகியவற்றை வழங்கினர். இதில் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் என்.மகேஷன், மண்டல அலுவலர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர்கள் பி.குணாளன், என்.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:-
ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் உள்பட புறநகர் பகுதிகளுக்கு விமான நிலையத்தில் இருந்து மழைநீர் வருகிறது. இந்த பிரச்சினையை விமான நிலைய ஆணையகம், ரெயில்வே துறை இணைந்து போக்க வேண்டும். இது குறித்து விவாதிக்க வருகிற 17-ந் தேதி விமான நிலைய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் மக்களை பாதுகாக்கும் வகையில் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story