பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் மலைபோல் குவிந்த குப்பைகளால் நோய் பரவும் அபாயம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் மலைபோல் குவிந்த குப்பைகளால் நோய் பரவும் அபாயம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2021 11:17 AM IST (Updated: 9 Nov 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

கூவம் ஆற்றில் மலைபோல் குவிந்த குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். பேரம்பாக்கத்தில் கூவம் ஆறு உள்ளது. இந்த நிலையில் பேரம்பாக்கம் கிராமத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், இருளஞ்சேரி, நரசிங்கபுரம், கூவம் குமாரச்சேரி, சத்தரை, மப்பேடு போன்ற சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வார சந்தையில் வந்து வாங்கிச்செல்கின்றனர்.

இந்த வார சந்தையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டிருக்கும். கடைக்காரர்கள் மளிகை மற்றும் காய்கறி பொருட்களை விற்பனை செய்துவிட்டு அதில் சேரும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் வார சந்தையில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கூவம் ஆற்றின் கரையோரம் ஒரு பகுதியில் கொட்டி விட்டுச்செல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளையும் இங்கு வந்துதான் கூவம் ஆற்றில் கொட்டுகிறார்கள். இதன் காரணமாக கூவம் ஆறு குப்பை கூளமாக மாசடைந்து காணப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேரம்பாக்கம் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஆற்றில் நீர் செல்கிறது. தற்போது கொட்டப்பட்ட இந்த குப்பைகளில் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அதிலுள்ள கழிவுப்பொருட்களை கால்நடைகள் மற்றும் பன்றிகள் உண்டு வருவதால் கால்நடைகளுக்கு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

இதன் காரணமாக கூவம் ஆறு மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே இந்நிலையை மாற்ற பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசி வரும் குப்பை கூளங்களை அகற்றி கூவம் ஆற்றை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story