எட்டயபுரத்தில் குடிநீர் ஆதாரமான பழமையான நீராவி தெப்பக்குளம் நிரம்பியது


எட்டயபுரத்தில் குடிநீர் ஆதாரமான பழமையான நீராவி தெப்பக்குளம் நிரம்பியது
x
தினத்தந்தி 9 Nov 2021 6:30 PM IST (Updated: 9 Nov 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் குடிநீர் ஆதாரமான பழமையான நீராவி தெப்பக்குளம் நிரம்பியது

எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் குடிநீர் ஆதாரமான பழமையான நீராவி தெப்பக்குளம் நிரம்பியது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீராவி தெப்பக்குளம்
எட்டயபுரத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மன்னர்களால்  6 ஏக்கர் பரப்பளவில் நீராவி தெப்பக்குளம் கட்டப்பட்டது. இதன் படித்துறையில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. எட்டயபுரம் அடுத்துள்ள பிதப்புரம் அருகே பாண்டியன் கண்மாய் மறுகால் பாயும் தண்ணீர் எட்டயபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள அட்டைகுளத்துக்கு வரும். அங்கிருந்து நீராவி தெப்பத்துக்கு கால்வாய் மூலமாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் நிரம்பி, எட்டயபுரம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இங்குள்ள இளைஞர்களின் நீச்சல் பழகும் கூடமாகவும் இருந்து வந்தது.
தண்ணீர் வரத்து
இந்த தெப்பத்தால் சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீரும் சிறப்பான அளவில் இருந்தது. பாண்டியன் கண்மாயிலிருந்து அட்டை குளத்துக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டது. தண்ணீர் வருவது முற்றிலுமாக தடைபட்டு, அட்டைகுளத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கியது. நீராவி தெப்பத்துக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டது. இதனால் சுமார் 5 ஆண்டுகளாக எட்டயபுரத்தில் இருந்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதற்கிடையே சிவசங்கரன் பிள்ளை ஓடையில் இருந்து நீராவி தெப்பத்துக்கு தண்ணீர் வரும் வகையில் குழாய் அமைக்கப்பட்டது.
நிரம்பியது
கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின்போது, நீராவி தெப்பத்துக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. இதே போல், கடந்த ஆண்டும் நீராவி தெப்பம் நிரம்பியது. இந்த தெப்பத்தில் மொத்தம் 12 படிகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படிக்கட்டு அளவு தண்ணீர் குறையும். 12 மாத கணக்குக்கு 12 படிக்கட்டுகளில் தண்ணீர் வற்றிவிடும். அதன் பின்னர் அடுத்த மாதம் மழை பெய்யும் போது மீண்டும் தெப்பம் நிரம்பும் வகையில் தான் இந்த தெப்பத்தின் கட்டுமானம் உள்ளது. இந்தாண்டு தற்போது பெய்து வரும் மழையில் நீராவி தெப்பக்குளம் நிரம்பியுள்ளது. இதனால் இந்தாண்டும் நிலத்தடிநீர் மட்டம் உயர்வதுடன், குடிநீர் பிரச்சினை இருக்காது  என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Next Story