பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சி
வேடசந்தூர் பகுதியில் பூசணிக்காய் விலை கடும் விழ்ச்சி அடைந்துள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள வெரியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பூசணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொடிகளில் இருந்து பூசணிக்காய் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக பூசணிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு பூசணிக்காய்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பூசணிக்காய்களை பறித்து கொண்டு விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. பூசணிக்காய்களை வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.9 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே தோட்டங்களில் பறிக்காமல் பூசணிக்காய்களை விட்டு விடும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து வெரியம்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறும்போது, 5 ஏக்கர் பரப்பளவில் நான் பூசணிக்காய் பயிரிட்டு இருந்தேன். இதற்காக ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன். தற்போது காய்களை அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். இதனால் 15 டன் அளவு பூசணிக்காய்களை அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டு விட்டதால் அவை பழுத்து வீணாகி வருகிறது என்றார்.
Related Tags :
Next Story