ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய வைகை அணை 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய வைகை அணை 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2021 7:16 PM IST (Updated: 9 Nov 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக ஒரே ஆண்டில் 3-வது முறையாக வைகை அணை நிரம்பியது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் அது நிரம்பி முழு கொள்ளளவை அடைந்ததாக கருதப்படும்.
இந்தநிலையில் வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 68.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
பின்னர் நேற்று மாலை வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டி நிரம்பியது. தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பி உள்ளது. வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 31-வது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களுக்கு 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உபரிநீர்
வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரி நீராக திறக்கப்படும். ஆனால் இந்த முறை உபரிநீரை ஆற்றில் திறக்காமல், கால்வாய் மூலம் பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டு உள்ளனர். மேலும் அணை நிரம்பியுள்ளதால் பொதுப்பணித்துறையினர் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வைகை அணையின் முன்பாக இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்திற்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
...........
பாக்ஸ்
-----------
58-ம் கால்வாயில் 13-ந்தேதி தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணை 69 அடியை எட்டி நிரம்பி உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டினால் மட்டுமே மதகின் மூலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். இந்நிலையில் தற்போது வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் 58-ம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க பொதுப்பணித்துைறயினர் முடிவு செய்து உள்ளனர். அதன்படி வருகிற 13-ந்தேதி 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு பொதுப்பணித்துறையினர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கான அனுமதியை இன்று அல்லது நாளை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 58-ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 முதல் 200 கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வறட்சியான உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் உசிலம்பட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story