ஏரி உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர்
விருத்தாசலம் அருகே ஏரி உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீரில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மாத்தூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அருணாசலம் ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை காரணமாக இந்த ஏரி நிரம்பியது. இருப்பினும் இந்த ஏரியை முறையாக கண்காணித்து கரையை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த ஏரிக்கரையின் ஒரு பகுதி திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீர் வீணாகி வெளியேறி அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதன்காரணமாக சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தற்காலிக சீரமைப்பு
இதையடுத்து அவர்கள் தங்களது வயல்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே ஏரியை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஏரியில் இருந்து தேவையின்றி அதிக அளவில் தண்ணீர் வெளியேறி விட்டதால் வரும் மாதங்களில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கரை மேற்கொண்டு உடையாமல் இருக்க தரமான முறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story