‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Nov 2021 9:27 PM IST (Updated: 9 Nov 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள தார்சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
நிஷாந்த் லாரன்ஸ், கல்லிடைக்குறிச்சி.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

நாங்குநேரி ஒன்றியம் இறைப்புவாரி பஞ்சாயத்து ஏமன்குளம் கிராமத்தில் உள்ள அனேக தெருக்களில் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீரை அகற்றி தெருக்களை சீரமைப்பு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மு.பால் பினெகாஸ், ஏமன்குளம்.

பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி மேலூர் விலக்கில் பயணியர் நிழற்குடை உள்ளது. இதன் உள்பக்கம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. மேலும் ஏராளமான விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலமாக உள்ளதால் உள்ளே நிற்கவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தார்சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டது. பின்னர் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், மேலூர்.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

தென்காசியில் இருந்து அம்பை வழித்தடத்தில் நெல்லை, நாகர்கோவிலுக்கு கொரோனா காலத்துக்கு முன்பு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது பல பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கபாண்டி, மத்தளம்பாறை.

வாறுகால் வசதி

சிவகிரி 5-வது வார்டு அரண்மனை வளாகம் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் வசதி கிடையாது. இதனால் கழிவுநீரில், மழைநீரும் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அதன் அருகில் குடிநீர் குழாய் உள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரில் நின்று தான் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, கழிவுநீர் தேங்காமல் இருக்க வாறுகால் வசதி செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
நடராஜன், சிவகிரி.

அடர்ந்து வளர்ந்துள்ள முள்செடிகள்

கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் விஷஜந்துக்கள் நடமாடும் இடமாக உள்ளது. மேலும் அதன் அருகில் தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி கட்டிடம் அமைந்துள்ளது. ஆகவே, அடர்ந்து வளர்ந்துள்ள முள்செடிகளை வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
நூருல் வஸீலா, கடையநல்லூர்.

தெருவிளக்கு அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா இனாம் மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீனிவாசநகர் 2-வது தெருவில் மின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சங்கர், சீனிவாசநகர்.

மோசமான சாலை

திருச்செந்தூர்- நெல்லை பிரதான சாலையில் ராணி மகாராஜபுரம் பாலம் முதல் காந்திபுரம் வரை சாலை மோசமாக உள்ளது. இதனால் இடதுபுறமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வலதுபுறமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
டி.சுரேஷ், நத்தகுளம்.

Next Story