கூத்தாநல்லூர் அருகே பரபரப்பு: குடிநீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


கூத்தாநல்லூர் அருகே பரபரப்பு: குடிநீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 9 Nov 2021 9:58 PM IST (Updated: 9 Nov 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி  தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது40). இவர் வடபாதிமங்கலத்தில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 
இந்த நிலையில் அவருக்கு கூத்தாநல்லூர் அருகே உள்ள எருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண் சங்கீதா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதா குழந்தையுடன் கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மோகன் வீட்டுக்கு வந்து தங்கினார். இதனையடுத்து ஊர் பஞ்சாயத்தார்கள் மோகனை அழைத்து பேசினர். 

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று மோகன், ‘ஊர் பஞ்சாயத்தார்கள் தன்னை அழைத்து பேசியது அவமானமாக உள்ளது, அதனால் நான் சாகப்போகிறேன்’ எனக்கூறி கிளியனூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடபாதிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று மோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்கொலை முயற்சியை கைவிட்டு, கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். 
தொடர்ந்து 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மோகன் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொட்டும் மழையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story