பெருமாள்கோவில் அறங்காவலர் கொலை வழக்கில் ஒருவர் கைது
செம்பனார்கோவில் அருகே குளத்தில் மூழ்கடித்து பெருமாள்கோவில் அறங்காவலர் கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே குளத்தில் மூழ்கடித்து பெருமாள்கோவில் அறங்காவலர் கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அறங்காவலர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே தலைச்சங்காடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாண்மதியப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநாங்கூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த திருவேங்கடம் (வயது 78) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அறங்காவலராக இருந்து வந்தார்.
இவர் கடந்த 7-ந் தேதி கோவிலுக்கு சென்றார்.
அப்போது அங்கு நடை திறப்பதற்கு முன்பாக கோவில் அருகே 3 பேர் பஜனை பாடி கொண்டிருந்தனர். அவர்களிடம் கோவில் நடைதிறக்காமல் பஜனை பாடக்கூடாது என்று அறங்காவலர் திருவேங்கடம் கூறி யுள்ளார். இதன் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவேங்கடத்தை காணவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.
பிணமாக மிதந்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கோவில் குளத்தில் திருவேங்கடம் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீசார் அங்கு சென்று திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில் அறங்காவலர் கோவில் நடை திறக்காமல் பஜனை பாட அனுமதி அளிக்காததால் தகராறில் ஈடுபட்டு பிறகு குளத்தில் மூழ்கடித்து திருவேங்கடத்தை தான் கொலை செய்ததாக கோவில் அருகே வசிக்கும் திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்த முகுந்தன் (24) என்பவர் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.
அதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி முகுந்தனை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர். கோவில் அறங்காவலர் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story