மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: காவிரி கரையோர பகுதிகளில் கலெக்டர், போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு-பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்


மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: காவிரி கரையோர பகுதிகளில் கலெக்டர், போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு-பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 9 Nov 2021 11:29 PM IST (Updated: 9 Nov 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில், குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்:
மேட்டூர் அணையில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில், குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் நிரம்பும் தருவாயில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. 
இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி. குமாரபாளையத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள காவேரி நகர், சின்னப்ப நாயக்கன் பாளையம், இந்திரா நகர், மணிமேகலை தெரு, பயணியர் மாளிகை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கின் போது பாதுகாப்பாக தங்க வைக்க குமாரபாளையத்தில் தனியார் திருமண மண்டபம் மற்றும் புத்தர் வீதி நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய வளாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் பார்வையிட்டார். 
நகராட்சி அலுவலகம் அருகில் காவிரி கரையோரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் சார்பில் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மக்கள் இழுத்து வரப்பட்டால் அவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வாகனங்களுடன், ரப்பர் மிதவை கயிறு ஆகியவற்றுடன் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவற்றையும் போலீஸ் டி.ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் (பொறுப்பு) சிவக்குமார், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடன் இருந்தனர்.
பள்ளிபாளையம்
இதேபோல் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நேற்று முன்தினம் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு மேற்கொண்டார். நேற்று சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அவர் ஓங்காளியம்மன் கோவில் தெருவில் காவிரி கரையோர பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளம் வந்தால் பாதுகாப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும் ஆவாரங்காடு பகுதியில் தீயணைப்பு வீரர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காவிரி ஆற்றில் குளிக்க தடை
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மோகனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை, ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என மோகனூர் பேரூராட்சி சார்பில் மோகனூர் சிவன் கோவில் படிக்கட்டுதுறை பகுதியில் முன் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை ஜேடர்பாளையம் படுகை அணையை வந்தடைந்தது. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் இளங்கோ, பரமத்தி வேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் மற்றும் கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமரன் ஆகியோர் சோழசிராமணியில் இருந்து காவிரி கரையோர பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது மீனவர்கள் பரிசல்களை இயக்கவும், பொதுமக்கள் துணிமணிகளை துவைக்கவும், கால்நடைகளை மேய்க்கவும், மீன் பிடிக்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் விளக்கினர். 
கோட்டாட்சியர் ஆய்வு
இதனிடையே நாமக்கல் கோட்டாட்சியா மஞ்சுளா, நேற்று மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட நஞ்சை இடையாறு, மணப்பள்ளி, மோகனூர், ஒருவந்தூர் வரை உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதை பார்த்து விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
மழை வெள்ளம் அதிகம் வந்தால் பொதுமக்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவில் திருமண மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மோகனூர் தாசில்தார் சண்முகவேலு மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story