தந்தையின் கள்ளக்காதலி குத்திக்கொலை


தந்தையின் கள்ளக்காதலி குத்திக்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2021 11:47 PM IST (Updated: 9 Nov 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

தந்தையின் கள்ளக்காதலி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பரமக்குடி, 

தந்தையின் கள்ளக்காதலி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாகம்பிரியாள் என்ற அன்புச்செல்வி (வயது 37). இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பாகம்பிரியாள் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் பாகம்பிரியாளுக்கும் வேந்தோணி அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் (47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சேகர் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

குத்திக்கொலை

இதனால் சேகரின் மகன் சுப்பிரமணியன் (20) ஆத்திரம் அடைந்து, நேற்று பாகம்பிரியாள் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது தந்தையுடன் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு அவர் கூறி இருக்கிறார். இதில் பாகம்பிரியாளுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாகம்பிரியாளின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறியபடி அவர் கீழே விழுந்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே சுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிய பாகம்பிரியாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியனை கைது செய்தனர். இவர் டிப்ளமோ படித்துவிட்டு, தற்போது டிரைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
தந்தையின் கள்ளக்காதலியை டிரைவர் குத்திக்கொன்ற சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story