சிறுபான்மையினருக்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருகிறது-பீட்டர் அல்போன்ஸ் பேச்சு


சிறுபான்மையினருக்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருகிறது-பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
x
தினத்தந்தி 9 Nov 2021 11:48 PM IST (Updated: 9 Nov 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

நெல்லை:
சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், தமிழக அரசு சிறுபான்மையினருக்கு செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

33 சதவீதம்

சிறுபான்மையினர் பாதுகாப்போடு வாழும் மாநிலம் தமிழ்நாடு. தற்போது தமிழகத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 19 சதவீதம் பேர் உள்ளனர். இத்துடன் மொழி சிறுபான்மையினரையும் சேர்க்கும்போது 33 சதவீதமாக அதிகரிக்கும். எனவே சிறுபான்மையினருக்கு என்று ஒரு தனி அதிகாரியை மாவட்டம்தோறும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதன்படி 5 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் 5 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு பணி நிரவல் நடந்து வருகிறது. பணி நிரவல் முடிந்தவுடன் இதுசம்பந்தமாக பரிசீலனை செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு

தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை என பலர் தெரிவித்தனர். புறம்போக்கு நிலத்தில் யாரும் ஆலயம் கட்டாதீர்கள். பட்டா இடத்தில் கட்டும்போது எந்த பிரச்சினையும் வராது. இதற்காக விண்ணப்பிக்கும்போது 90 நாட்களுக்குள் கோரிக்கையை ஏற்க முடியும் அல்லது முடியாது என அதிகாரிகள் பதில் கூறுங்கள். ஆலயம் கட்டி முடித்த பின்னர் இடையூறு செய்ய வேண்டாம் என கலெக்டரிடம் கேட்டுக்கொள்கிறேன். 

தமிழக அரசு சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இந்த அரசு உள்ளது. பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவது போல் தேவாலயங்களில் உள்ள ஊழியர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை

கூட்டத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் கூறுகையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் பலர் பணி நிரந்தரம் இல்லாமல் பணியாற்றுகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு மற்றும் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை முழுமையாக கிடைக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்ய வேண்டும். முஸ்லிம் இளைஞர்களுக்கு தடையில்லாமல் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை வேண்டும். நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் வார்டு மறுவரையறையில் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மறுவரையறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சிறுபான்மை நல அலுவலர் உஷா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாநிலச்செயலாளர் குமரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை அணிவிப்பு

முன்னதாக பீட்டர் அல்போன்ஸ் நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு உள்ள காமராஜர், இந்திரா காந்தி மற்றும் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story